தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: கார்-லாரி மோதல்; பெண் உள்பட 5 பேர் பலி

ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானின் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பெண் உள்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த கார் திகாதியா நகர் அருகே சென்றபோது திடீரென சரக்கு லாரி ஒன்றின் மீது மோதியது.

இந்த விபத்து பற்றி காவல் உதவி ஆய்வாளர் ஜெய் சிங் கூறும்போது, காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சாக்சு நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்து விட்டார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது. அந்த கார் நம்பர் பிளேட்டானது, எம்.பி. ஒருவரின் பதிவெண் கொண்டது என விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கார் பதிவெண் அடிப்படையில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். விபத்து பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.