ஜெய்பூர்,
மாணவர்களின் தேசிய பக்தியை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி மாணவ விடுதிகளிலும் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 789 மாணவர்கள் விடுதி ராஜஸ்தானில் இயங்கி வருகிறது. இந்த விடுதிகளில் மாணவர்கள் காலை 7 மணிக்கு ஒன்றுகூடி தேசிய கீதம் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது ஏற்கனவே கட்டாயமான ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதே விதிகள் விடுதிகளிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த உத்தரவு செயல்பாட்டுக்கு வந்ததாகவும் ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை முதன்மை செயலர் சமித் ஷர்மா, விடுதிகளில் மாணவர்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற விதி ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், விடுதிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இது முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. ஆகவே புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள மாணவர்கள் காலையில் பிரேயர் கூட்டத்தில் ஒன்று கூடும் பொழுது கட்டாயம் தேசிய கீதம் பாட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.