ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பிஹில்வாரா மாவட்டம் அலோலி கிராமத்தில் கடந்த செவ்வாய்கிழமை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாற, தூய்மைப்பணிக்கு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர்கள் அங்கு பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த நச்சு ரசாயனத்தை மதுபானம் என நினைத்து வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், நச்சு ரசாயனத்தை மதுபானம் என நினைத்து 4 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று முன் தினம் மாலை குடித்துள்ளனர். அதை குடித்த உடன் அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுசிலா (வயது 40), ஜாம்னி (வயது 60), படாமி (வயது 60) ஆகிய 3 பெண்களும், ரத்தன் (வயது 42) என்பவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நச்சு ரசாயனத்தை குடித்த மேலும் ஒரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.