புதுடெல்லி,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி ஏ.பி.பி. நியூஸ்சி வோட்டர் ஆகியவை வாக்காளர்களிடம் கருத்து கணிப்பை நடத்தின.
இதில் ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் 142 இடங்களைக் கைப்பற்றும் என்றும், ஆளும் பா.ஜனதாவுக்கு 56 தொகுதிகளும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
மாநிலத்தில், அடுத்த முதல்மந்திரி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு 36 சதவீதம் பேரும், முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு 27 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதில் மூத்த காங்கிரஸ் தலைவரான அசோக் கெலாட்டிற்கு 24 சதவீத ஆதரவு கிடைத்து உள்ளது.
பா.ஜனதாவின் ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 122 தொகுதிகளில் வென்று 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும், பா.ஜனதாவுக்கு 108 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
அதேபோல் சத்தீஷ்கார் மாநிலத்திலும் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரசுக்கு 47 இடங்களும், பா.ஜனதாவுக்கு 40 தொகுதிகளும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு எதிர்ப்பலை வீசினாலும், வாக்காளர்கள் முதல்மந்திரி பதவிக்கு முறையே சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராமன் சிங் ஆகியோரே பொருத்தமானவர் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த 2 மாநிலங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது.