டாக்கா,
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று, வங்காளதேச பிரதமர் சேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். மூன்று நாட்கள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள ராஜ்நாத்சிங், ஷேக் ஹசீனாவுடனான சந்திப்பின் போது, இரு தரப்புக்கும் இடையேயான பொதுவான கவலைகள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், வங்காளதேச பிரதமருடன் மிகவும் பயனுள்ள வகையிலான சந்திப்பு நடைபெற்றது. இரு தரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள், பரஸ்பர நலன்கள் ஆகியவை குறித்து இருவரும் விரிவான ஆலோசனை நடத்தினோம் என்று தெரிவித்தார்.
ராஜ்நாத்சிங் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஷேக் ஹசீனா, பிராந்திய அளவில் அனைத்து நாடுகளும் கைகோர்த்து செயல்பட்டால், பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பது என்பது சாத்தியமான ஒன்றே.
நிலம் எல்லை ஒப்பந்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவும் வங்காளதேசமும் தற்போது வரை சுமூக தீர்வு கண்டுள்ளன. எனவே, பிற பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.