புதுடெல்லி,
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 25 பேரை நக்சலைட்டுகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கான உத்திகளை வகுப்பதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது.
இதில் கலந்துகொள்வதற்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் காணப்படும் சத்தீஷ்கார், பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்த முதல்மந்திரிகளுக்கும், நக்சலைட்டுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளான 35 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், துணை ராணுவ படை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நிதி கிடைப்பதை தடுக்கவேண்டும்
எந்த போரிலும் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக போருக்கு பணம் தேவைப்படுகிறது. அந்த காலகட்டத்தில் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், வெடி பொருட்கள், ஆயுதங்களை வாங்குவதற்கும் பணம் தேவைப்படும். எனவே நக்சலைட்டுகளுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்களை தடுத்துவிட்டாலே போதும். அவ்வாறு செய்துவிட்டால் அவர்களை வெற்றி கண்டுவிட முடியும்.
எனவே நக்சலைட் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும். குறிப்பாக நக்சலைட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தங்களுடைய நோக்கத்தில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். களத்தில் அவர்களுடன் மோதும்போது உத்திகளை வகுப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது ஆகியவற்றில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் முக்கியம்.
மாநிலங்களுக்கு முழு உரிமை
நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினரை வரவழைக்கும்போது ஆக்ரோஷமான கொள்கைகள், சிந்தனைகள், செயல்பாடுகள் மாநில அரசுகளுக்கு இருக்கவேண்டும். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது மாநில அரசுகள்தான் முழு உரிமையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய ஆயுதப்படையினர் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
நக்சலைட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வளர்ச்சி பணிகள், சாலை அமைத்தல் போன்றவை துரிதமாக நடைபெற வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் 12 ஆயிரம் பேர் நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் 2,700 பேர் பாதுகாப்பு படை வீரர்கள். மீதமுள்ள 9,300 பேர் அப்பாவி பொதுமக்கள்.
கொள்கைகளை வகுக்கவேண்டும்
நக்சலைட்டுகளை ஒடுக்க குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்டகாலம் என்னும் அடிப்படையில் கொள்கைகளை வகுத்து செயல்பட வேண்டும்.
அமெரிக்காவில் 2001ம் ஆண்டு நியூயார்க் நகரில் பயங்கரவாதிகள் இரட்டை கோபுர கட்டிடத்தை தகர்த்த பின்னர் இனி பயங்கரவாத செயல்கள் நடக்க ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா சவால் விடுத்தது. அதை இன்றளவும் முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது. இதுபற்றி அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், அமெரிக்காவின் மீதான இந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியால் ஏற்பட்டதல்ல. கற்பனை செய்ய தவறியதால் கிடைத்த தோல்வி என்று கூறியது.
எனவே நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அறிவுப்பூர்வமான தலைமை, ஆக்ரோஷமான உத்திகள், உளவுத்தகவல்களின் அடிப்படையில் விரைவான நடவடிக்கை, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், நிதி கிடைப்பதை தடுத்தல் ஆகியவை தேவை.
குண்டு துளைக்காத உடைகள்
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது அவசியம். ஆளில்லாத சிறிய பறக்கும் விமானங்களை அனுப்பி நக்சலைட்டுகளின் மறைவிடங்களை கண்டுபிடிக்கலாம். ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ். கருவிகள், ரேடார், செயற்கைகோள் படங்களை பயன்படுத்தலாம்.
நக்சலைட்டுகள் பெரும்பாலும் கொள்ளையடிக்கும் ஆயுதங்களையே பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் அறிவோம். இதை தடுப்பதற்காக நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் படை வீரர்களுக்கு பயோ மெட்ரிக் முறையிலான ஸ்மார்ட் துப்பாக்கிகள் விரைவில் வழங்கப்படும். இதேபோல் ஆயுதங்களில் அவை இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி இணைக்கப்படும்.
இதனால் கொள்ளைபோகும் துப்பாக்கிகளை கைவிரல் ரேகை பதிவு செய்த வீரர்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இந்த துப்பாக்கிகளை நக்சலைட்டுகள் கொள்ளை அடித்தாலும் அதனால் எந்த பயனும் கிடைக்காது. அவை பயனற்றதாகிவிடும். ஆயுதங்களில் அவை இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி இருப்பதால் அவற்றை கண்டுபிடித்து விடலாம். படை வீரர்களின் காலணிகள், குண்டு துளைக்காத உடைகள் போன்றவற்றிலும் இந்த வசதி இணைக்கப்படும். இதேபோல் ஜெலட்டின் மற்றும் இதர வெடி பொருட்களை பயன்படுத்த ரகசிய அடையாள குறியீட்டு எண் பயன்படுத்தப்படும்.
மத்திய அரசு உதவும்
இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் சில மாநிலங்களிடம் இருக்காது என்பதால் மத்திய அரசு இது தொடர்பான உதவிகளை அளிக்கும். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதைவிடவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), சந்திரசேகர ராவ் (தெலுங் கானா), சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்) ஆகியோர் பங்கேற்கவில்லை.