புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், மோடி அரசுக்கு எதிராக இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையில் அமளி நீடிப்பதால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் வழக்கம் போல் அமளி நீடித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.