தேசிய செய்திகள்

பொதுக்கூட்டங்களுக்கு தடை: சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் பிரசாரம்..!

பொதுக்கூட்டங்கள் நடத்த தடை இருப்பதால், உத்தரகாண்ட் மாநிலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவும், காங்கிரசும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஜனவரி 31-ந் தேதிவரை 5 மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு 20 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், பொதுக்கூட்டங்கள் நடத்த முடியாவிட்டாலும் அரசியல் கட்சிகள் மாற்று வழியை பின்பற்றி வருகின்றன.

அதுதான் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்யும் வழிமுறை. ஆளும் பா.ஜனதா, இதற்காக டேராடூன், ஹல்ட்வானி ஆகிய இடங்களில் தலா ஒரு ஸ்டூடியோவை அமைத்துள்ளது. அங்கு வேட்பாளரை உடன் வைத்துக்கொண்டு, தலைமை பேச்சாளர் பேசுவார். அவரது பிரசாரம், பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

இதுவரை இதுபோல் 18 காணொலி பிரசார கூட்டங்களை பா.ஜனதா நடத்தி இருக்கிறது. அவற்றில் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, மாநில பா.ஜனதா தலைவர் மதன் கவுசிக், மத்திய மந்திரி அஜய் பட், முன்னாள் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் உள்ளிட்டோர் பங்கேற்று பேசி உள்ளனர். பிரதமர் மாடி, அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்கும் காணொலி கூட்டங்கள் விரைவில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளன.

உத்தரகாண்டில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் 35 லட்சம்பேர் உள்ளனர். அவர்களில் 20 லட்சம்பேரை தங்கள் பிரசாரம் மூலம் எட்டி விட்டதாக பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஹிமன்சு சங்தானி தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு கூட்டத்தையும் சராசரியாக 1 லட்சம் பேர் பார்த்துள்ளதாக அவர் கூறினார். தலைவர்களின் பிரசார திட்டங்கள், டெல்லியில் வகுக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சியான காங்கிரசும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகிறது. 400 சமூக வலைத்தள தன்னார்வலர்களை களம் இறக்கி உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் கட்சியின் அதிகாரபூர்வ 150 வாட்ஸ்அப் குழுக்கள் ஆகியவை மூலமாக 1,500 ஊழியர்கள் கட்சியின் செய்தியை பரப்பி வருகிறார்கள். என்னென்ன தகவல்களை ஆடியோ-வீடியோ வடிவிலும், கார்ட்டூன் வடிவிலும் பிரசாரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க 50 படைப்பாளிகள் கொண்ட குழு இயங்கி வருகிறது.

சமீபகாலம் வரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் இருந்ததால், அவர்களின் காணொலி வடிவ பொதுக்கூட்டங்கள் அவ்வளவாக நடத்தப்படவில்லை. அவர்கள் உத்தரகாண்டுக்கு திரும்பி விட்டதால், இனிமேல் காணொலி பொதுக்கூட்டங்களை அக்கட்சி நடத்த உள்ளது.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட காங்கிரசின் பிரசார பாடலான சார் தாம் சார் காம், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு