பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் நீதிமன்ற விசாரணையின் போது குற்றத்திலிருந்து தப்பிக்கப் பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று தனக்குத் தானே ஆண்மையற்றவர் என்று சூட்டிக் கொண்ட பட்டம். 1990 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு ஆண்மைக் குறைபாடு இருந்து வருவதாக ராம் ரஹீம் காவல்துறையிடம் கூறியிருக்கிறார். ஆனால் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் இருந்த இரு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு விட்டதால், அவரது பொய்களை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி; உடனடியாக ராம் ரஹீமிடம், நீங்கள் ஆண்மையற்றவர் என்றால், உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் எப்படிப் பிறந்தார்கள்? - என்று சடாரென கேள்வி எழுப்பினார்.
ஆண்மையற்றவர் என்பது மட்டுமல்ல, தான் மனரீதியாகவும் சரியான ஆரோக்யத்தில் இல்லை, மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் தனக்கு இருப்பதால் தன்னை மன்னித்து விடுதலை செய்யுமாறும் கூட குர்மீத் காவல்துறையினர் மற்றும் நீதிபதியின் முன்னால் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதியோ, அவர் சொன்ன எந்தவிதமான வாதங்களையும் ஏற்றுக் கொள்ள வில்லை . மேலும் ஆகஸ்டு 25 ஆம் நாள் குர்மீத் பாலியல் குற்றவாளி தான் எனும் தீர்ப்பை உறுதி செய்தார்.
தீர்ப்பு கூறப்பட்டதும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.வன்முறையை தூண்ட குர்மீத் தான் சிக்னல் கொடுத்து உள்ளார்.
இதையெல்லாம் அறிந்த சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங், கலவரத்தைக் காரணம் காட்டி குர்மீத்தை, வெறும் பாலியல் குற்றவாளியாக மட்டுமே கருதாமல் அவரை ஒரு காட்டு மிருகம் என வர்ணித்து 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதன்படி தற்போது குர்மீத் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.