புதுடெல்லி,
கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியாவில் வினியோகம் செய்யும் மேட்ரிக்ஸ் நிறுவனம் உடனடியாக ரேபிட் பரிசோதனை கருவிகளை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று ரேர் மெடாபாலிக்ஸ் லைவ் சயின்சஸ் என்ற தனியார் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதி நஜ்மி வாஜ்ரி காணொலி மூலம் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா தொற்றுக்கு எதிராக போரில் முன்நின்று செயல்படும் அமைப்புகளுக்கு நாடு முழுவதும் மிகக்குறைந்த செலவில் அதிக பரிசோதனைக் கருவிகள் அவசரமாக கிடைக்க வேண்டும்.
இதன்படி ஒரு ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிக்கு 65 சதவீதம் லாபம் வைத்துக்கொள்ளலாம். அதாவது ரூ.245-க்கு இறக்குமதி செய்யப்பட்டால், ரூ.155 சேர்த்து ஒரு ரேபிட் கிட்டின் விலை ஜி.எஸ்.டி. உள்பட ரூ.400-க்கு மேல் விற்கக்கூடாது. மக்களின் நலன் கருதி விரைவான பரிசோதனைக்காக இந்த கருவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.