தேசிய செய்திகள்

அரசு பரிந்துரை செய்த பிறகே ரூபாய் நோட்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டது: ரிசர்வ் வங்கி ஒப்புதல்

அரசு பரிந்துரைக்கு பிறகே ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உயர் மதிப்புடைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பின் போது, உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்றே ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அமைச்சர்கள் சிலர் கூறி வந்த நிலையில், தற்போது அதற்கு மாறான கருத்து வெளியாகியுள்ளது.

கருப்புப் பணம், கள்ளப் பணம், பயங்கரவாதம் ஆகிய மூன்றையும் ஒடுக்கும் பொருட்டு, புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டது.

இதற்காக பல ஆண்டுகளாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. அதேபோன்று நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்துக்குக் கொண்டு வரலாம் என்று அரசு தெரிவித்தது.

அதன்படி, புதிய வடிவத்துடனும், எண் வரிசையுடனும் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ஆலோசனைகளை வழங்கியது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிய ரூ.2,000 நோட்டு அச்சடிப்புப் பணிகள் தொடங்கின.

கடந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதியன்று உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறலாம் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஆலோசனை தெரிவித்தது. அதன்பேரில், ஒப்புதல் பெறப்பட்டு அதனை ரிசர்வ் வங்கி வழிமொழிந்தது.அதற்கு அடுத்த சில மணி நேரங்களில், மத்திய அமைச்சரவையிடம் ஆலோசித்து பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.