மும்பை,
புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8- ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.17.9 லட்சம் கோடியில் 86 சதவீதம் செல்லாததாகி விட்டது. இதனால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டை போக்க புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்து புழக்கத்தில் விட்டது.
இதைத்தொடர்ந்து மக்களிடையே காணப்பட்ட பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல நீங்கி வருகிறது. எனினும் கடந்த 9 ந்தேதி எடுத்த புள்ளி விவரப்படி, இன்னும் 18.4 சதவீத அளவிலான பணத்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த தட்டுப்பாட்டை ஈடுசெய்ய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசும் ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தது. அதன்படி 200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளது. நவீன பாதுகாப்பு அம்சங்களுடனும் இந்த 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகுன்றன.