புதுடெல்லி,
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ந்தேதி தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் வன்முறை மூண்டது. இதில் ஏராளமான போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் தினந்தோறும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில் மணிந்தர்ஜித் சிங் (வயது 23), கெம்ப்ரீத் சிங் (21) ஆகிய 2 வாலிபர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் இருவரும் டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறையில் தொடர்புடையவர்கள் ஆவர்.
அதிலும் குறிப்பாக செங்கோட்டைக்குள் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை, கெம்பிரீத் சிங் ஈட்டியால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகரை சேர்ந்தவர் ஆவார்.
இதைப்போல பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூரை சேர்ந்த மணிந்தர்ஜித் சிங் தற்போது இங்கிலாந்தின் பர்மிங்காமில் வசித்து வருகிறார். இவர் ஆலந்து குடியுரிமையும் பெற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்பி செல்ல முயன்றபோது டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டை வன்முறை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.