புதுடெல்லி,
இந்தியாவில் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில அவ்வப்போது பரவும் வதந்திகளில் கும்பல் தாக்குதல் போன்ற கொடூரங்கள் அரங்கேறியது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மத்திய அரசும் வாட்ஸ்-அப், பேஸ்புக் நிறுவனங்களுடன் பேசி, போலி செய்திகள் பரவலை தடுக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதுவரையில் போலி செய்திகள் பரவலில் விடை தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா தொண்டர்களிடம் பேசுகையில், உண்மையோ, பொய்யோ எதையும் நம்மால் வைரலாக செய்ய முடியும் என கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானின் கோடாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் அமித்ஷா பேசுகையில் உண்மையோ, பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை வைரலாக்க முடியும். சுமார் 32 லட்சம் பேர் நம் வாட்ஸப் குரூப்களில் உள்ளனர். இதனால், எதையும் வைரலாக ஆக்கலாம் என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவை தாக்கிவிட்டார் என்று நம்முடைய வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அது நடக்கவில்லை என்றாலும் அது வைரலானது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதி உள்ளது எனவும் அமித்ஷா பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அகிலேஷ் யாதவ் பதிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் ஆளுங்கட்சி தலைவர் பொய்களை பரப்ப தனது தொண்டர்களை எப்படி தூண்டிவிடுகிறார். அரசின் மீது உள்ள பல்வேறு பிரச்சனைகளை மறைக்க இப்படி பொய்களை பரப்ப பாஜக முயற்சிக்கிறது. இடைத்தேர்தல் தோல்வியை போல வரும் அனைத்து தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும் என பதிவிட்டுள்ளார்.