புதுடெல்லி,
டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால் அவர்கள் 4 பேரையும் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி தூக்கில் போட டெல்லி செசன்சு கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரா மரண வாரண்டு பிறப்பித்து உள்ளார்.
இந்த நிலையில், தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை மறு ஆய்வு செய்யக்கோரி முகேஷ் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்து உள்ளார்.
இதற்கிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை திகார் சிறை அதிகாரிகள் வழங்கவில்லை என்று கூறி அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி அஜய்குமார் ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.