திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை முதல் மந்திரி பினராயி விஜயன் சமீபத்தில் வெளியிட்டார்.
இதனை முன்னிட்டு, ஊரடங்கு தளர்வுகள் இன்று காலை 7 மணி முதல் அமலுக்கு வந்தன. இதன்படி, 8 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் வழக்கம்போல் செயல்படவும், கடைகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, அனைத்து நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பார்கள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் அடிப்படையில், எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், கேரளா முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் தொடரும்.
கேரளாவில் ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு வேலைக்கு செல்லும் மக்கள் ஆட்டோ, பேருந்து ஆகிய வசதிகளை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் இன்று முதல் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகளால் மதுபானம் வாங்க இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை காலையிலேயே மக்கள் குவிந்து விட்டனர். மதுபான கடைகளின் முன் தொடங்கிய வரிசை நீண்டு கொண்டே அடுத்தடுத்த கடைகளையும் கடந்து தெருமுனை வரை சென்றுள்ளது.