தேசிய செய்திகள்

தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி - நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடக்கிறது

ரூ.3 ஆயிரத்து 941 கோடி செலவில், தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு, 2010-ம் ஆண்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு, வீடு, வீடாக ஆய்வு நடத்தி, இந்த விவரங்கள் புதுப்பிக்கப்பட்டன. பின்னர், அதை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த பணியும் முடிந்தநிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை அசாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்பணி நடத்தப்படும்.

இந்த மாநிலங்களில் ஒரே பகுதியில் 6 மாதங்களும், அதற்கு மேலும் வசிப்பவர்கள் அல்லது அந்த பகுதியில் இனிவரும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இடம்பெற தகுதி உடையவர்கள் ஆவர். இதில் பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அடையாளம் காணும் விரிவான தகவல் தொகுப்பு உருவாக்குவதே தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது. குடியுரிமை சட்டம் 1955-ன்படி, ஒவ்வொரு கிராமம், சிறு நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதிவேடு தயாரிக்கப்படும். இதில், பயோ மெட்ரிக் விவரங்களும் இடம்பெறும். கடந்த ஆகஸ்டு மாதம் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதேபோல 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். 2-வது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி வரை நடத்தப்படும்.

காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பனி நிறைந்த பகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை ஆய்வு செய்யவும், அரசின் திட்டங்களை கண்காணிக்கவும், எதிர்கால திட்டங்களை வடிவமைக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் வீட்டில் உள்ள அனைவரின் விவரங்களும் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பு பணிக்கு ரூ.8,754.23 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நாட்டில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் தனித்தனியாக தளபதிகள் உள்ளனர். முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க வேண்டும் என்று கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால், இந்த சிபாரிசு செயல்வடிவம் பெறவில்லை.

இதற்கிடையே, கடந்த சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, அந்த பதவிக்கான பொறுப்புகள், அதிகாரம் உள்ளிட்டவற்றை இறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி பதவியை உருவாக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அஜித் தோவல் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தகவலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார். முப்படை தலைமை தளபதி 4 நட்சத்திரங்கள் பெற்றவராகவும், ராணுவ விவகாரங்கள் துறை தலைவராகவும் இருப்பார் என்றும் அவர் கூறினார்.

ரெயில்வே வாரியத்தை மாற்றி அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ரெயில்வே வாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 8-ல் இருந்து 5 ஆக குறைக்கப்படும்.

ரெயில்வேயில் உள்ள என்ஜினீயரிங், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், இந்திய ரெயில்வே சேவை என்ற ஒரே பிரிவாக ஒருங்கிணைக்கப்படும்.

நிலத்தடி நீர் வளத்தை பெருக்க ரூ.6 ஆயிரம் கோடி செலவிலான அடல் புஜல் யோஜனா என்ற திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கர்நாடகா, மத்தியபிரதேசம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 8 ஆயிரத்து 350 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தடி நீரை பெருக்கும் பணியில் சமுதாயங்கள் ஈடுபடுத்தப்படும்.

திவால் சட்டத்தில் மேலும் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்