தேசிய செய்திகள்

குடியரசு தின விழா பாதுகாப்புக்கு மத்தியில் இம்பாலில் இரட்டை குண்டுவெடிப்பு பின்னணியில் யார்?

குடியரசு தின விழா பாதுகாப்புக்கு மத்தியில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு அதிர வைத்துள்ளது.

தினத்தந்தி

இம்பால்,

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

அங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடாதபடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அங்கு ரிம்ஸ் சாலையில் அதிகாலை சுமார் 5 மணிக்கு அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த குண்டுகள் (ஐ.இ.டி.) வெடித்தன.

அதிகாலை நேரம் என்பதால் குண்டுச்சத்தத்தால் அந்த நகரமே அதிர்ந்தது. நீண்ட தொலைவுக்கு இந்த சத்தம் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டு வெடிப்பில் உயிர்ச்சேதம் இல்லை.

இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து தூள் தூளாகின. கடைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மார்தியா வாங்க்கேம் என்ற 10 வயது சிறுமி காயம் அடைந்தாள். இந்த சிறுமி, குண்டு வெடித்த பகுதியில் அமைந்திருந்த பயிற்சி மையம் ஒன்றில் தங்கிப் படித்து வந்ததாகவும், குண்டு வெடிப்பில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்ததில் அவள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். தீவிர விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்த சிறுமி மார்தியா உடனடியாக ரிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு குறித்து இம்பால் மேற்கு போலீஸ் சூப்பிரெண்டு மேகசந்திரா உள்ளூர் ஊடகத்திடம் பேசும்போது, பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த தடை செய்யப்பட்ட குழுக்கள், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறோம் என கூறினார்.

குண்டு வெடிப்புகளை நடத்திய நபர்களை தேடும் வேட்டையை இம்பால் போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனைகள் நடக்கின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்