மும்பை,
மராட்டியத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி தாய், தந்தை ஆகிய 2 பேரையும் இழந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதில் ஆதரவற்ற குழந்தைகள் ஏ, பி, சி. என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளனர். ஏ' பிரிவில் தாய், தந்தை மட்டும் இன்றி உடன்பிறந்தவர்கள், குடும்பத்தினர் என யாரும் இல்லாமல், முகவரி இல்லாத குழந்தைகள் இருப்பார்கள். பி' பிரிவில் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் இன்றி ஆசிரமங்கள் போன்றவற்றில் தங்கி இருக்கும் குழந்தைகள் இடம்பெறுவார்கள். இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். சி' பிரிவில் 18 வயதுக்கு முன் தாய், தந்தையை இழந்து நெருங்கிய உறவினர் அல்லது குடும்பத்தினரின் கண்காணிப்பில் வளரும் பிள்ளைகள் இருப்பார்கள். இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடையாது. எனினும் இந்த பிள்ளைகளுக்கு கல்வி கட்டண சலுகை, கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
இதேபோல வேலை பார்க்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகர்புறங்களில் பெண்கள் விடுதிகளை கட்டவும் மந்திரிசபை முடிவு செய்து உள்ளது. இதன்படி மும்பை நகர்பகுதி, தானே, புனேயில் தலா 4 விடுதிகளும், மும்பை புறநகரில் 6 விடுதிகளும் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு விடுதியும் 25 முதல் 100 பேர் வரை தங்கும் வகையில் கட்டப்பட உள்ளது.