தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து துணை ஜனாதிபதி ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து துணை ஜனாதிபதி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் கொடுத்தன.

இதையடுத்து, வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் ஐதராபாத்துக்கு சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் அங்கு இன்றும், நாளையும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், வெங்கையா நாயுடு, ஐதராபாத் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, அவசரமாக நேற்று டெல்லிக்கு திரும்பினார். பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் குறித்து ஆலோசனை நடத்தும் பணியை தொடங்கினார்.

சட்ட நிபுணர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். முதலில், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் ஆலோசித்தார். சட்ட அமைச்சக முன்னாள் செயலாளர் பி.கே.மல்கோத்ரா, சட்டசபை முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் ஆகியோருடனும் விவாதித்தார். மாநிலங்களவை செயலக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியையும் அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதுபோல், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் மீது சந்தேக நிழல் படிந்துள்ளது. அதனால், அவர் வழக்குகளை விசாரிக்கும் நீதித்துறை மற்றும் நிர்வாகப்பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுபடும் வரை, வழக்கு களை விசாரிக்கக்கூடாது. இதை அவரது மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம்.

இந்த விஷயத்தில், தலைமை நீதிபதியை ஆதரித்து பா.ஜனதா பேசி வருகிறது. இதன்மூலம், தனது நடுநிலை தவறி வருகிறது. நீதித்துறை சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவிக்கிறது.

எனவே, இப்பிரச்சினையை பா.ஜனதா அரசியல் ஆக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதியே சொல்ல வேண்டும். அவர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல. பிறகு ஏன் அவரை ஆளுங்கட்சி மந்திரிகள் பாதுகாக்க வேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் நிராகரித்தால், அதை எதிர்த்து கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு