புதுடெல்லி,
நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
உணவகங்களோ தங்கும் விடுதிகளோ, வாடிக்கையாளர்களை சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. வாடிக்கையாளர்களுக்கு, சேவை பிடித்திருக்கும்பட்சத்தில், அவர்களாக விருப்பப்பட்டு கொடுப்பதே சேவைக் கட்டணம். அவை தனிப்பட்ட விருப்பமானதும் கூட. சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
உணவுக்கட்டணத்துடன் சேர்த்து மொத்த தொகைக்கு ஜி.எஸ்.டி.,விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது. மேற்கண்ட நிறுவனங்கள் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம்.
அவ்வாறு இல்லாமல், தன்னிக்கையாக சேவைக் கட்டணத்தை சேர்க்கும் உணவகங்கள் அல்லது விடுதிகள் மீது வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915 என்ற எண்ணில் உணவகம் அல்லது விடுதிக்கு எதிராக புகாரளிக்கலாம் என்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.