புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. தகவல் கமிஷனர்களின், தேர்தல் கமிஷனர்களுக்கு இணையான அதிகாரம், பணி நிலவரம் மற்றும் சம்பளத்தை குறைக்க வகை செய்யும் இந்த மசோதா மீது விவாதம் நடந்தது.
அப்போது, இந்த மசோதா தகவல் சட்டத்தை பலவீனப் படுத்துவதாகவும், தகவல் குழுவை அதிகாரமற்றதாக மாற்றுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் மறுத்தார். இந்த அமைப்பை தன்னாட்சி பெற்றதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.
ஆனால் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எனினும் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.