புதுடெல்லி,
ரெயில்வே துறை 13 லட்சம் ஊழியர்களை கொண்ட போக்குவரத்தாக தற்போது உள்ளது. இந்த நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட ரெயில்வே குழு ஒன்று, ரெயில்வே பணியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக போனஸ், சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்க புதிய மதிப்பீட்டு முறைகளை பரிந்துரை செய்துள்ளது.
ரெயில்வே பணியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக போனஸ், சலுகைகள் மற்றும் கவுரவிக்கும் வகையிலான பேட்ஜ் போன்றவற்றை வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. நல்ல செயல் திறனுக்காக இன்னும் கூடுதலான வெகுமதிகளை வழங்கவும் அத்துறை முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்குவதற்காக ஒரு ஊழியரின் ஐந்து ஆண்டுகளின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கு பதிலாக, கடந்த ஏழு ஆண்டுகளில் சிறந்த ஐந்து ஆண்டுகளை கணக்கில் எடுத்து கொள்ள குழு பரிந்துரைத்துள்ளது.
ஊழியர்களின் பெற்றோருக்கு இலவச பயண வசதி மற்றும் மருத்துவ வசதி மற்றும் ஊழியர்களுக்கான வீட்டு வசதிகள் போன்ற வசதிகளை இந்த அறிக்கை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்வியை தொடர விரும்பும் ஊழியர்களுக்கான நிதியுதவியையும் இது பரிந்துரைத்துள்ளது.
ஏ மற்றும் பி அதிகாரிகளுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும். லோகோ விமானிகள் போன்று 10 ஆண்டுகள் விபத்தில்லா சேவையை பூர்த்தி செய்த பிறகு பணப்பரிசு மற்றும் இதன் நினைவாக பேட்ஜ் ஆகியவை கேங்மேன் மற்றும் டிராக்மேன் ஆகியோருக்கு வழங்கவும் குழுவானது பரிந்துரைத்து உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ரயில்வே அமைச்சருடன் அனைத்து பொது மேலாளர்கள் அடங்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட 14 முக்கிய முடிவுகளில் ஒரு பகுதியான இந்த அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் அதன் ஒப்புதலுக்காக உள்ளது.