தேசிய செய்திகள்

இந்தூரில் தூய்மை நகர கொண்டாட்டத்தில் சாலையில் அசுத்தம் ஏற்படுத்திய அவலம்

இந்தூரில் தூய்மை நகர கொண்டாட்டத்தில் சாலையில் அசுத்தம் ஏற்படுத்திய அவலம் நடந்துள்ளது.

இந்தூர்,

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டம் 2016-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 5 முறை தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் 'ஸ்வஸ் சர்வேக்ஷான்' தூய்மை நகரத்திற்கான விருதை இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக வென்றுள்ளது.

இதற்கான வெற்றி விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு மத்திய பிரதேச அரசு அதிகாரிகளிடம் வழங்கினார். இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் சூரத் 2-வது இடமும், மராட்டியத்தின் நவி மும்பை 3-வது இடமும் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 'ஸ்வஸ் சர்வேக்ஷான்' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதல் இடமும், சத்தீஸ்கர் 2-வது இடமும், மராட்டியம் 3-வது இடமும் கைப்பற்றியுள்ளன.

இதனை தொடர்ந்து, தூய்மை நகரத்திற்கான விருது வென்றதற்காக இந்தூரில் மக்கள் பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், தெருக்களில் மேளதாளங்கள் முழங்கியும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.

எனினும், ஒரு சிலர் தூய்மையாக இருந்த சாலையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இதனால், காகித குப்பைகள் சாலை முழுவதும் பரவி கிடந்தன. ஆனாலும், அதனை கண்டு கொள்ளாமல் அவர்கள் நகர்ந்து சென்றனர். தூய்மை பணியாளர்கள் நகரங்களை தூய்மை செய்து முன்னேற்ற வழியில் அழைத்து சென்றபோதும், அலட்சியத்துடன் ஒரு சிலர் இதுபோன்று அசுத்தம் ஏற்படுத்தி சென்ற அவலமும் நடந்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்