புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேரா, லண்டனில் சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் சொத்து வாங்கியதாகவும், ராஜஸ்தானில் நில மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகள் தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களில் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராபர்ட் வதேரா டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தன்னிடம் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரவிந்த் குமார், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், அமலாக்கத்துறை முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதே சமயம் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவுக்கு வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.