புதுடெல்லி,
டெல்லி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் விகாஷ் குப்தா. அதே மருத்துவமனையில் இயக்குனராக பணியாற்றியவர் காஜல் கோல்தார். 2016-17-ம் ஆண்டில் இருவரும் டெல்லியை சேர்ந்த மருந்து வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு மருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1 கோடி லஞ்சம் கேட்டு நிர்ப்பந்தித்தனர்.
இதனால் விகாஷ் குப்தா வங்கி கணக்கில் ரூ.38 லட்சமும், அவருடைய மனைவி வங்கி கணக்கில் ரூ.10 லட்சமும் மருந்து நிறுவனம் செலுத்தியது. அதேபோல் காஜல் கோல்தார் வங்கி கணக்கில் ரூ.52 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தி உள்ளது.
பின்னர் இது குறித்து அந்த நிறுவனம் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தது. அந்த புகாரின் பேரில் இரு டாக்டர்களின் வங்கி கணக்குகளையும் சி.பி.ஐ. ஆய்வு செய்தது. அப்போது அவர்கள் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. மேலும் விகாஷ் குப்தா வங்கி கணக்கில் கணக்கில் வராத பணம் அதிக அளவில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறது.
விகாஷ் குப்தா தற்போது நெல்லை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், காஜல் கோல்தார் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மருத்துவமனையிலும் டாக்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.