புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கொரோனாவால் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும்போது ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் செயலக கட்டிடம் தேவையா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:-
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்து விட்டது. அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளால், கட்டமைப்பு பாதுகாப்பு குறைந்து வருகிறது. அதிகரித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை அதிகப்படுத்தவும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவைப்படுகிறது. 2026-ல் நடைபெற உள்ள தொகுதி மறுசீரமைப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதாலும், நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நிகழும் இரு அவைகளின் கூட்டு அமர்வுகளுக்கு, போதிய வசதிகள் தேவைப்படுவதாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதியும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.