புதுடெல்லி,
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வில் எந்தஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை என விவசாயத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
கல்வித்துறையின் மேம்பாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கல்வி கடன் தொடர்பாக சொல்லும்படியாக எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
பட்ஜெட்டில் பிரதான இடம்பிடிக்கும் பாதுகாப்புத்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமான தொகையை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இந்திய பாதுகாப்புத்துறைக்கு ரூ. 2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட 7.81 சதவிதம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டை (ரூ.2.74 லட்சம் கோடி) விட அதிகம் ஆகும். இதில் ரூ.1.96 லட்சம் கோடி வருவாய் (நிகர) செலவினத்துக்கும், ரூ.99 ஆயிரம் கோடி மூலதன செலவினத்துக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை சார்ந்த ராணுவ உற்பத்தி கொள்கையை அரசு செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் 2 ராணுவ தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கியது உள்பட ராணுவ உற்பத்தியில் தனியார் முதலீட்டுக்கான வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல் ராணுவ துறையின் திறன் அதிகரித்தல் மற்றும் நவீனப்படுத்துதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு துறையை முன்னேற்றவும், பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றுவதில் சுயசார்பு நாடாக மாற்றவும் கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள எனவும் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். பாதுகாப்புத்துறைக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.58 சதவித அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2018-19-க்கான மத்திய பட்ஜெட்டில் 24,42,213 கோடியில் 12.10 சதவிதம் ஆகும்.