புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் இவர் நில மோசடியில் ஈடுபட்டதாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் வதேரா மற்றும் அவரது தாயிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து நில மோசடி தொடர்பாக வதேராவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் ரூ.4.62 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இது தொடர்பாக மத்திய அரசு மீது வதேரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் சட்டத்துக்கு கீழ்ப்படிந்து வருகிறேன். இந்த விவகாரத்தில் சுமார் 6 நாட்கள் நான் விசாரணைக்கு ஆஜரானேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். ஆனாலும் எனது பணியிடத்தை முடக்கி இருப்பது, முற்றிலும் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.