தேசிய செய்திகள்

ரூ.80 கோடி ரெயில்வே சொத்து சேதம்; கலவரக்காரர்களிடம் வசூலிக்கப்படும் - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துகள் சேதமடைந்ததாகவும், கலவரக்காரர்களிடம் அவை திரும்ப வசூலிக்கப்படும் என்றும் ரெயில்வே வாரிய தலைவர் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காள மாநிலத்திலும், அசாமிலும் ரெயில்களையும், ரெயில் பெட்டிகளையும், டிக்கெட் கவுண்ட்டர்களையும் தீயிட்டு எரித்தனர். ரெயில் நிலையங்களை சூறையாடினர்.

இந்நிலையில், ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துகள் சேதமடைந்தன. அவற்றில் கிழக்கு ரெயில்வேக்கு ரூ.70 கோடி சொத்துகளும், வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வேக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

இவை முதல்கட்ட மதிப்பீடுதான். இறுதிக்கட்ட மதிப்பீட்டில் இந்த தொகை உயரக்கூடும். அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்களிடம் இருந்து இந்த தொகை திரும்ப வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்தியதாக கண்டறியப்பட்டவர்கள் மீது ரெயில்வே சட்டம் 151-வது பிரிவின்கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படும். இந்த சட்டப்பிரிவு, 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யக்கூடியது. மேலும், சேதமதிப்பை வசூலிக்க கோர்ட்டுக்கு செல்வோம் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ரெயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் மேலும் கூறியதாவது:-

ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவில், கூடுதலாக 3 சரக்கு வழிப்பாதைகளை ரெயில்வே உருவாக்கி வருகிறது. இவை 10 ஆண்டுகளில் தயாராகி விடும். அதன்பிறகு இப்போதுள்ள ரெயில் தண்டவாளங்களில் அதிகமான பயணிகள் ரெயில்களை இயக்க முடியும். அதன்பிறகு, காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டே இருக்காது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா வழித்தடங்களில் உருவாக்கப்படும் சரக்கு வழிப்பாதைகள் 2021-ம் ஆண்டு முடிக்கப்படும். அதன் பிறகு மேற்கண்ட 2 வழித்தடங்களிலும் காத்திருப்பு பட்டியலே இல்லாமல் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டே எல்லோருக்கும் கிடைக்கும். பயணிகள் ரெயில்களின் சராசரி வேகத்தை 60 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்.பில் உருவாக்கப்பட்ட 120 ஜோடி ரெயில்கள், விரைவு ரெயில்களாக மாற்றப்பட்டன. 104 பயணிகள் ரெயில்கள், மெயின்லைன் மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது