தேசிய செய்திகள்

ரூ.9 கோடி கடன் மோசடி விவகாரம்: வங்கி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது - சி.பி.ஐ. நடவடிக்கை

ரூ.9 கோடி கடன் மோசடி தொடர்பாக வங்கி ஊழியர்கள் உள்பட 10 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளை கொடுத்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தனர். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதே கிளை, மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெறுவதற்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சாந்திரி பேப்பர்ஸ் என்ற நிறுவனத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளை ரூ.9 கோடி மதிப்புள்ள கடன் உத்தரவாத கடிதங்களை வழங்கியது.

அவற்றின் அடிப்படையில், வெளிநாட்டில் ரூ.9 கோடி கடன் வாங்கிய சாந்திரி பேப்பர்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்தவில்லை. இதனால், கடன் உத்தரவாதம் அளித்த பிராடி ஹவுஸ் கிளை மீது அந்த கடன் சுமை விழுந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

உத்தரவாத கடிதம் வழங்கியபோது, அக்கிளையில் பணியாற்றிய 10 ஊழியர்கள் மற்றும் சாந்திரி பேப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஈஸ்வர்தாஸ் அகர்வால், ஆதித்யா ராசிவாசியா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இவர்களில், ஓய்வுபெற்ற ஊழியர் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் கரத் ஆகியோரை தவிர மீதி 10 பேரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

10 பேரும் நாளை (வெள்ளிக்கிழமை)வரை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.


கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...