வாஷிங்டன்,
400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
விமானப்படை தளபதி தனோவா பேசுகையில், ரபேல் விமானங்களை தவிர ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளும் மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ரபேல் போர் விமானங்களும், எஸ்-400 ரக ஏவுகணைகளும் விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் என்று கூறியிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணையை வாங்குவதில் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது என்றார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில் இருதரப்பு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மிரட்டல்
ரஷியாவிடன் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் வகையில் காட்சா என்ற சிறப்பு சட்டத்தையும் அமெரிக்கா இயற்றி இருக்கிறது. சீனாவின் மீது நடவடிக்கையையும் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் சீனா, அமெரிக்கா, ரஷியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது.
இந்நிலையில் ரஷியாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் திட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரிடம் பேசுகையில், ரஷியாவுடன் வர்த்தக பரிமாற்றங்களை செய்தால், காட்சா சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எங்கள் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் தெரிவித்து உள்ளோம். எஸ்400 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வது, காட்சா சட்டத்தின் 231வது பிரிவின் கீழ் பொருளாதார தடைக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.