புனே,
புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தற்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த இந்திய சீரம் நிறுவனம், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த நிறுவனம், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செப்டம்பர் மாதம் உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 30 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப மாற்ற செயல்முறைகளின் ஒரு பகுதியாக, புனே இந்திய சீரம் நிறுவனமானது, ரஷ்யாவின் கமலேயா மையத்தில் இருந்து செல் மற்றும் வெக்டர் மாதிரிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.