திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்ததை தொடர்ந்து கேரளா முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் வீடுகள் மாறி மாறி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதைப்போல கட்சி அலுவலகங்களும் தாக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவின் அரசியல் பரபரப்பு நிறைந்த கண்ணூர் மாவட்டத்தில் இந்த வன்முறை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் கொடி அணிவகுப்பு என பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவோரை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி மாநிலம் முழுவதிலும் இருந்து இதுவரை 6000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.