புதுடெல்லி,
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று சபரிமலைக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வன்முறையை தூண்டிவிட பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது என கேரள மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசு அதனை ஸ்திரமாக மறுத்து வருகிறது. திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யும் திட்டத்தில் இல்லையென்றே தெரிகிறது. இதற்கிடையே பிற அமைப்புகள் தரப்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இப்போது பெண்களை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா பிராமணர் சங்கம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே பந்தளம் ராஜ குடும்பத்தினர் தரப்பிலும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது.