தேசிய செய்திகள்

கல்வி நிலையங்களில் குங்குமம்-ஹிஜாப் இரண்டையும் நீக்கக்கூடாது: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் குங்குமம்-ஹிஜாப் இரண்டையும் நீக்கக்கூடாது என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

தினத்தந்தி

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஹிஜாப் அணிகிறார்கள்

நாட்டின் அரசியல் சாசனத்தில் குழந்தைகள் கல்விக்கு சிறப்பு உரிமை உள்ளது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாய கல்வி பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவரவர் மத நம்பிக்கைகளை காக்கவும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. சீருடை விஷயத்தில் கடந்த 5-ந் தேதி வரை யாருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. ஆனால் அரசு திடீரென சீருடை குறித்து புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது ஏன்?.

சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினரும் தலையில் துணி கட்டி கொள்கிறார்கள். அதே போல் முஸ்லிம் பெண்கள் தலையில் ஹிஜாப் அணிகிறார்கள். முஸ்லிம் பெண்கள் அனைவரும் இதை பின்பற்றுவது இல்லை. சிலர் ஹிஜாப் அணிவது இல்லை. இதை அணிய வேண்டும் என்றோ அல்லது அணியக்கூடாது என்றோ உத்தரவிட முடியாது. கர்நாடக அரசின் உத்தரவால் முஸ்லிம் மாணவிகளின் அடிப்படை உரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலையின்மை அதிகரிக்கும்

இது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு இடைக் கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகும் மந்திரிகள் சிலர் வெவ்வேறு விதமாக கருத்துகளை கூறி வருகிறார்கள். தேர்வுகள் நடைபெற்று வரும்போது, அதற்கு குறுக்கீடு செய்வது சரியா?. முஸ்லிம் மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிய தொடங்கவில்லை. இத்தனை நாட்களாக அவர்கள் ஹிஜாப் அணிந்து தான் வகுப்புக்கு வந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பா.ஜனதா அமைதியை சீர்குலைத்துவிட்டது. மேலும் மாநிலத்தில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் தயங்கும். இதனால் வேலையின்மை அதிகரிக்கும். இதனால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். இதற்கு பா.ஜனதா அடித்தளம் அமைக்கிறது. கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே தொடர்ந்து அனுசரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை திருத்தி அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது சரியல்ல. கல்வி நிலையங்களில் குங்குமத்தையோ அல்லது ஹிஜாப்பையே எதையும் நீக்கக்கூடாது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்