புதுடெல்லி,
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படைப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய காந்தள் நாட்கள் என்ற கவிதை நூல் படைப்புக்கு வழங்கப்படுகிறது.
கவிஞர் இன்குலாப் சமூக அக்கறை தோய்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கவிதைகளை படைத்தவர். இவரது படைப்புகள் இலக்கிய உலகத்தால் மட்டுமல்ல, போராட்டக்காரர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும் உரம் சேர்க்கும் படைப்புகளாக விளங்குகின்றன. இவருடைய மனுசங்கடா நாங்க மனுசங்கடா எனும் கவிதை பல மேடைகளில் பாடப்படுகிறது. இன்குலாப் எழுதிய அவ்வை நாடகம் பெண்ணியம் பேசும் நாடக மேடைகளில் முக்கியத்துவம் பெறும் படைப்பாக விளங்குகிறது.
தஞ்சாவூர் அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள காந்தள் நாட்கள் நூல் 2016-ல் வெளிவந்தது.
கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் கூறும்போது, அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம். இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும் காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். இன்குலாப் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்தனர்.
கவிஞர் யூமா வாசுகி
மொழிபெயர்ப்பு நூல் பிரிவுக்கான விருது மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதி 69 பதிப்புக்கள் கண்டு லட்சக்கணக்கில் விற்பனையான கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ள கவிஞர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கான விருதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் கி.நாச்சிமுத்து கலந்துகொண்டார். சிறுகதை விருதுக்கான தேர்வுக்குழுவில் கவிஞர் பொன்னீலன், கவிஞர் இந்திரன், படைப்பாளி பா.செயப்பிரகாசம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மொழிபெயர்ப்புக்கான விருது தேர்வுக்குழுவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், பேராசிரியர் ஜெயதேவன், பேராசியர் கு.சிவமணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்,
சாகித்ய அகாடமி செயலாளர் சீனிவாசராவ் கூறும்போது, இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் 7 நாவல்கள், 5 கவிதை நூல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 5 இலக்கிய திறனாய்வு நூல்கள், ஒரு நாடகம் மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மொழிகளின் நிபுணர் குழுக்கள் பரிந்துரைத்த விருதுக்கான படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி தலைவர் டாக்டர் விஸ்வநாத்பிரசாத் திவாரி தலைமையிலான செயற்குழு ஒப்புதல் அளித்தது என்றார்.
சாகித்ய அகாடமியின் இந்த விருதில் ரூ.1 லட்சம் ரொக்கம், தாமிர பட்டயம், சால்வை ஆகியவை அளித்து சிறப்பிக்கப்படுவார்கள். மொழி பெயர்ப்புக்கான விருது தொகை ரூ.50 ஆயிரம். இந்த விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி நடைபெறுகிறது.