ஐதராபாத்
தெலுங்கானாவில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா சட்டசபையில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, பெற்றோரை கவனிக்க தவறும் அல்லது புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும். தெலுங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல் மசோதா, 2026-க்கு நேற்று சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசும்போது, மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய தெலுங்கானா சட்டசபை புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது, தற்போதுள்ள மத்திய சட்டங்களை விட மேம்பட்டதாக உள்ளது. ஏற்கனவே பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007 என்ற தேசிய சட்டம் உள்ளது.
இந்த புதிய மசோதாவின்படி பொது பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகிறது. இதனை கடைப்பிடிக்க தவறினால், அவர்களின் சம்பளத்தில் 15 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இவற்றில் எது குறைவோ, அந்த தொகை பிடித்தம் செய்யப்படும். பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளை திருத்துவது சமூகத்தின் பொறுப்பாகும். ஒரு சமூக பொறுப்பாக, இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது என்றார்.
ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகை நேரடியாக, பெற்றோரின் வங்கி கணக்கில் சென்று சேர்ந்து விடும். இதில் எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் கூட விதி விலக்கல்ல. அவர்களும் இந்த சட்டத்திற்குள் அடங்குவர் என தகவல் தெரிவிக்கின்றது. பெற்றோரின் உரிமைகள் நல்லெண்ண அடிப்படையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அவர்கள் புறக்கணிக்கப்படும்போது சட்டம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என இந்த மசோதா உறுதி செய்யும் என்றார்.