புதுடெல்லி,
ரெயில் நிலையங்களை மேம்பாடுசெய்து தரம் உயர்த்தும் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சேலம் ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையொட்டி ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் சேலம் ரெயில் நிலையம் பல கட்டங்களாக புத்துயிரூட்டப்படுகிறது. இதற்காக ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரெயில் நிலைய கட்டிட தோற்றம், சம கால தோற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தின் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் ஒட்ட முடியாத வகையில் சுற்றுச்சுவர்களின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக போக்குவரத்து சீராக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோ, வாடகைக்கார்கள், தனியார் வாகனங்கள் போன்ற வணிக வாகனங்கள் நிறுத்த தனி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே செயலி அடிப்படையில் கார் சேவை வழங்க புதிய இடம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நடைமேடைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.