தேசிய செய்திகள்

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. #SamajwadiParty

வாரணாசி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர்.

வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியே பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகார் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆதாரமற்ற புகார்களை கூறி களங்கம் ஏற்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என எல்லை பாதுகாப்பு படை வட்டார தகவல் தெரிவித்தது.

இதன்பின், ஹரியானாவின் ரேவரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் என்னவெனில், பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் என்றார்.

இந்த நிலையில், அவரை பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியின் வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி நிறுத்தியிருந்தது.

இதற்கான இறுதிநாளான ஏப்ரல் 29ந்தேதி அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். எனினும், அவரது வேட்பு மனு இன்று நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி தேஜ் பகதூர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 6.15 மணியளவில் சான்றை சமர்ப்பிக்கும்படி நான் கேட்டு கொள்ளப்பட்டேன். சான்றை நாங்கள் சமர்ப்பித்து விட்டோம். எனினும் எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வோம் என கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை