மத்தியப் பிரதேச மாநிலம் தார் நகரில் போஜ்ஷாலா (போஜசாலை) என்ற வளாகம் உள்ளது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னமான இந்த வளாகம், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகம் தங்களது வழிபாட்டு தலம் என இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர். போஜ்ஷாலா வளாகம் இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் வழிபாட்டுத் தலம் என்று இந்து மதத்தினரும், அது, மவுலா மசூதி என்று இஸ்லாமிய மதத்தினரும் கூறுகின்றனர்.
இங்கு வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதையடுத்து, மோதலை தணித்து இரு தரப்பும் சுமுகமாக வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாட்டை தொல்லியல் துறை செய்தது. அதாவது, போஜ்ஷாலா கட்டடத்தில் இந்து மதத்தினர் செவ்வாய்க்கிழமை பூஜை செய்து வழிபடலாம் என்றும், இஸ்லாமிய மதத்தினர் வெள்ளிக்கிழமை தொழுகை செய்யலாம் என்றும் உத்தரவிட்டது. அதன்படி இரு தரப்பினரும் வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதி இந்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக மத்திய பிரதேச ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மபி ஐகோர்ட் விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மத்திய பிரதேச ஐகோர்ட் கூறியிருப்பதாவது; போஜ்சாலா வளாகம் கல்விக்கடவுள் சரஸ்வதிக்காக கட்டப்பட்ட கோவில் இருந்தது. சர்ச்சைக்குரிய இந்தப் பகுதி, பர்மர் வம்சத்தின் போஜராஜன் உடன் தொடர்புடைய சமஸ்கிருதக் கல்வி மையமாக போஜசாலாவாக இருந்தது என்பதை வரலாற்று சான்றுகள் உறுதி செய்கின்றன. இதனை கோர்ட் பதிவு செய்கிறது. தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள கடவுள் சரஸ்வதி சிலையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசை அணுக வேண்டும்.
2003ம் ஆண்டு வெள்ளிக்கிழமை தோறும் இங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த தொல்லியல் துறை அளித்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது. தொல்லியல் துறையே இந்த வளாகத்தை பராமரிக்க வேண்டும். மசூதி கட்டுமானத்திற்கு அதே மாவட்டத்தில் வேறு இடம் ஒதுக்க மாநில அரசை முஸ்லிம் தரப்பினர் அணுகலாம்” என்று தீர்ப்பளித்துள்ளது.