புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயுஷ் துறையின் புதிய மந்திரியாக அசாம் முன்னாள் முதல்-மந்திரியான சர்பானந்தா சோனோவால் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ஆயுஷ் துறை அமைச்சகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை உணர்ந்து, இந்தியாவின் பாரம்பரிய சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதால், ஆயூஷின் அதிகாரிகளுடன் தொடர்புகொள்கிறோம் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, ஆயுஷ் துறை இணை மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட மகேந்திரபாய் கடந்த 8-ந் தேதியே பொறுப்பேற்றிருந்தார். புதிய ஆயுஷ் துறை மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் சர்பானந்தா சோனோவாலுக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறையும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.