புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அந்த கட்சி இரண்டாக உடைந்தது. அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா என இரு அணிகளாக அதிமுக பிளவு பட்டுள்ளது. அ.தி.மு.க. கட்சி தங்கள் பக்கம் தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்க இரு அணிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் பிளவுபட்ட அணிகளை இணைப்பதற்காக 2 தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனாலும் 2 தரப்பினரும் முரண்பாடான கருத்துகளை கூறி வருவதால் அ.தி.மு.க.வில் பிளவுபட்ட அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணியினர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளனர். 70 ஆயிரம் பிரமாணப்பத்திரங்களை அமைச்சர் சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார். முன்னதாக நேற்று, பன்னீர் செல்வம் அணி தரப்பில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.