தேசிய செய்திகள்

4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்து சசிகலா விடுதலை ஆனார் - பெங்களூரு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்ததை அடுத்து சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்து சரண் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 3 பேரும் அதே சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவருக்கும், இளவரசிக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைய இருந்தது. ஆனால் ஏற்கனவே அவர் சிறையில் இருந்த நாட்களை கணக்கிட்டு, சசிகலா ஜனவரி 27-ந் தேதி (அதாவது நேற்று) விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விடுதலை தினத்தை எதிர்நோக்கி காத்திருந்த சசிகலாவுக்கு திடீரென கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் ஆக்சிஜனை சுயமாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறை தண்டனையின் கடைசி நாளான நேற்று, அவரை விடுதலை செய்ய பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டு கேசவமூர்த்தி, சூப்பிரண்டு லதா உள்ளிட்ட அதிகாரிகள் காலை 9.30 மணியளவில் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்த விடுதலை ஆவணங்களில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்றனர்.

16 ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஆடை உள்ளிட்ட அவர் பயன்படுத்திய உடைமைகள் ஒப்படைக்கும் ஆவணத்திலும் சசிகலா கையெழுத்திட்டார். தன்னால் நியமிக்கப்பட்டு உள்ளவரிடம் அவற்றை ஒப்படைக்குமாறு அவர் சிறை அதிகாரிகளிடம் கூறினார். அதை அந்த அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். சரியாக நேற்று காலை 11 மணிக்கு சசிகலா சிறை கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.

சசிகலாவிடம் அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான கடிதம் ஒன்றையும் சிறை அதிகாரிகள் வழங்கினர். மேலும் இது தொடர்பாக அந்த மருத்துவமனை முதல்வரிடம் சிறை நிர்வாகம் ஒரு சார்பில் ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தில் சசிகலாவை இன்று (நேற்று) சிறையில் இருந்து விடுதலை செய்கிறோம். அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவரை சாதாரண நோயாளியாக கருதி சிகிச்சையை தொடர்ந்து வழங்கலாம். இல்லாவிட்டால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யலாம். அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டபோது, மருத்துவமனைக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., இளவரசியின் மகன் விவேக் மற்றும் குடும்பத்தினர், வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், தொடர்ந்து இன்னும் 3, 4 நாட்கள் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார். அவர் சிகிச்சை பெறும் கட்டிடத்தின் முன் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இளவரசி வருகிற 5-ந் தேதி விடுதலை செய்யப்படுகிறார். சுதாகரன் இன்னும் அபராதத்தொகையை செலுத்தாததால் அவரது விடுதலை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையே விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், சசிகலா வருகிற 30-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதுவரை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலை செய்யப்பட்டதையொட்டி அவரது ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் நேற்று விக்டோரியா அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் சசிகலா வாழ்க... சசிகலா வாழ்க... என கோஷங்களை எழுப்பினர். ஆதரவாளர்கள் அதிகளவில் குவிந்ததால், விக்டோரியா மருத்துவமனை ரோட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது.