பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலா, இன்று காலை 10.30 மணிக்கு விடுதலை செய்யப்படவிருக்கிறார்.
கடந்த 20ம் தேதி ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சிறைத்துறை, சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் நீங்கிய நிலையில், கொரோனாவுக்கான சிகிச்சையே அளிக்கப்படுகிறது.
சிறையில் இருந்து அவர் விடுதலையானாலும், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும் உதவியுடன் நடப்பதாகவும், அறிகுறி இல்லாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், செயற்கை சுவாச கருவியின் உதவியின்றி தொடர்ந்து இயல்பாக சசிகலா சுவாசித்து வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை (வியாழக்கிழமை) சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தால், அவரை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வார காலம் தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பெங்களூருவிலேயே ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.