புதுடெல்லி,
அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொண்டு தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டு அறிய வேண்டும் என்று கோரி சிலர் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.ஏ.நஜீப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது அயோத்தி பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மட்டுமே விவாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், சம்பந்தம் இல்லாத நபர்கள் தங்களை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.