மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டில் நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ். மீடியா என்னும் நிறுவனம் 305 கோடி ரூபாய் அளவிலான வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் அந்நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கில், கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
நான்கு முறை அவரை விசாரிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதியளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம், தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு முன்னதாக கருப்புப் பணப் பரிமாற்றம் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யாதிருக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு செய்திருந்தார்.
அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என்றும் கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார். இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய தடை விதித்து கடந்த 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தடையை ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதிவரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.