புதுடெல்லி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சுப்ரீம் கோர்ட்டின் 4 நீதிபதிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜன நாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கடந்த 12-ந்தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கும், 4 நீதிபதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் செலமேஸ் வர் உள்பட 4 மூத்த நீதிபதி கள் இடையே சமரச பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் குழுவை இந்திய பார் கவுன்சில் நியமித்தது. இந்த குழு நேற்று தலைமை நீதிபதியை சந்தித்தது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டிய மூத்த நீதிபதிகள் இன்று பணிக்கு திரும்பினர். அவர் கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.
4 நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதியிடம் புகார் கூறப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புன்னகை மட்டும் செய்தார்.
இந்த நிலையில் நீதிபதிகள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா கூறி உள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்குள்ளே பேசி பிரச்சனையை தீர்த்துக்கொண்டனர். நீதிபதிகளின் அதிருப்தியை, யாரும் அரசியலாக்க விரும்பவில்லை உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது என இந்திய பார்கவுன்சில் சங்கத் தலைவர் மனன் மிஸ்ரா கூறினார்.
#SupremeCourt | #JudgesVsCJI | #DipakMisra