புதுடெல்லி,
ஜல்லிக்கட்டு அறிவிக்கை
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்தபோது, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைகளை சேர்த்து 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை போட்டது. இதன் காரணமாக 2015ம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி 7-ல் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக நிபந்தனைகளுடன்கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் இந்த அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.
அவசர சட்டம்
இதற்கிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற வகையில், தமிழ்நாட்டில் பெரும்போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து மத்திய அரசுடன் ஆலோசித்து, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியது.
ஆனாலும் அந்த அவசர சட்டத்துக்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டை நாடி, இடைக்கால தடை உத்தரவு எதுவும் பெற்றுவிடக்கூடாது என்று கருதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை ஒரு கேவியட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ஏதாவது வழக்குகள் வந்தால், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கோரப்பட்டுள்ளது. இது போன்று சுப்ரீம் கோர்ட்டில் 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிரந்தர சட்டம்
மேலும், ஜல்லிக்கட்டுக்காக பிறப்பித்த அவசர சட்டத்துக்கு மாற்றாக தமிழக சட்டசபையில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நிரந்தர சட்ட மசோதா கொண்டு வந்தார்.
விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட மசோதா, 2017 என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா, குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேறியது. அது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நேற்று ஆஜரானார். அவர், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த ஆண்டு ஜனவரி 6ந் தேதி பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற மத்திய அரசு விரும்புகிறது என குறிப்பிட்டார். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதி கோரினார். அதற்கு நீதிபதிகள், மனுவை தாக்கல் செய்யலாம். ஆனால், இதுபற்றி சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் அமர்வு முடிவு எடுக்கும் என குறிப்பிட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு நிரந்தர சட்டம் இயற்றி விட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு
இன்று மத்திய அரசு சார்பில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து 2016-ல் பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. மத்திய அரசின் இடைக்கால மனு மீதான விசாரணை திங்கள் அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்ப பெறுவதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் 2016 அறிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதியுடன் வேறு அம்சங்களும் இடம் பெற்று இருந்தது என விலங்குகள் நலவாரியம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் அறிவிக்கையில் இடம்பெற்று இருந்த மற்ற அம்சங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என விலங்குகள் நலவாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்ப பெறுவதால் வழக்கு முடித்து வைக்கப்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.