பெங்களூரு ராஜீவ்காந்தி அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் ஜனாதிபதி ஆகியோருடன் குழு புகைப்பட 
தேசிய செய்திகள்

எதிர்காலத்தில் கொடிய வைரஸ்கள் பரவும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை; சுகாதாரத்துறையில் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சுகாதாரத்துறையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

தினத்தந்தி

பட்டமளிப்பு விழா

கர்நாடக அரசின் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய 2 துறைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஆகும். கொரோனா வைரஸ் பரவலால் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் கொரோனா போன்ற வேகமாக பரவும் கொடிய வைரஸ்கள் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதை நாம் எதிர்கொள்ள சுகாதாரத்துறை பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த கொரோனா வைரசில் இருந்து உலகம் சரியான பாடத்தை கற்றுக் கொண்டுள்ளது.

துயரத்தை...

கொரோனா நமக்கு பெரிய பாடத்தை கற்பித்துள்ளது. மற்றவர்கள் சிக்கலில் இருந்தால் இன்னொருவர் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளது. உலக சகோதரத்துவத்திற்கு இது பெரிய பாடம். சுகாதாரத்துறையில் தொடர்ந்து புதிய புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதாவது நோய் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தலில் இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்ததால், எண்ணில் அடங்கா உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரசின் தன்மையை புரிந்து கொண்டு, அதை ஆராய்ச்சி செய்து அதில் இருந்து விடுபட முடியும் என்பதை நமது விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். தற்சார்பு திட்டத்தில் நமது விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இதனால் நமது நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். நமது நாட்டிற்கு மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விஞ்ஞானிகள் சாதனை

இது நமது விஞ்ஞானிகளின் சாதனை. கொரோனா நெருக்கடியால் அதிகளவில் தொந்தரவுகள், சிக்கல்கள் ஏற்பட்டன. இத்தகைய நேரத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றினர். பகல்-இரவு என்று பார்க்காமல் பிறரின் உயிரை காக்க அவர்கள் ஆற்றிய பணி, ஒட்டுமொத்த மக்களுக்கு முன்மாதிரியானது ஆகும்.

இன்று மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள், இத்துடன் நமது கல்வி முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது. கல்வியில் நீங்கள் ஒரு நிலையை எட்டியுள்ளீர்கள் அவ்வளவு தான். கற்றல் என்பது நிரந்தரமாக நடைபெறக்கூடிய விஷயம். கற்றல் எப்போதும் முடிவு பெறுவது இல்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள மனித வளத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களின் அறிவாற்றலை பெருக்கி கொள்ள வேண்டும்.

நீங்கள் மறக்கக்கூடாது

பட்டங்களை பெற்ற பிறகு சமுதாயத்தில் உங்களின் பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது. நீங்கள் உங்களின் எதிர்காலத்தை வடிவமைத்து கொண்டு, நாட்டை கட்டமைக்க கைகோர்க்க வேண்டும். நமது நாட்டின் எதிர்காலம் மாணவர்களை நம்பி தான் உள்ளது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. பட்டம் பெற்ற உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறனே.

இன்று தங்க பதக்கம் பெற்றவர்களில் அதிகம் பேர் பெண்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். என்னிடம் தங்க பதக்கம் பெற்ற 11 பேர்களில் 8 பேர் பெண்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மொத்தத்தில் தங்க பதக்கம் வென்ற 111 பேரில் 87 பேர் பெண்கள் ஆவார்கள். தங்க பதக்க சாதனையில் பெண்களின் பங்கு 80 சதவீதம் ஆகும். இது உண்மையிலேயே சிறந்த சாதனை ஆகும்.

பெண்களின் வழிநடத்தல்

மருத்துவ துறையின் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆர்வமாக பங்கேற்க வேண்டும். புதுமைகளை பயன்படுத்தி நோக்கத்திற்கும், செயல்படுத்துதலுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்த ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் டாக்டாகள், நர்சுகள் உள்பட மருத்துவ துறையினர் 2 லட்சம் பேருக்கு கொரோனாவை நிர்வகிக்கும் பயிற்சி அளித்ததாக கேள்விபட்டேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

மருத்துவ அறிவியல் உள்பட அனைத்து துறைகளிலும் பெண்களின் வழிநடத்தல் அதிகரித்துள்ளது. மருத்துவ அறிவியல் துறை வேகமாக முன்னேறி வருகிறது. மருத்துவ துறையில் வேகமான ஆராய்ச்சி வளர்ச்சி, புதுமையான தொழில்நுட்பங்களால் அறிவாற்றல் பல மடங்கு பெருகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தற்சார்பு திட்டத்தின் 6 முக்கிய தூண்களில் சுகாதாரத்துறையும் இடம் பிடித்துள்ளது. சுகாதாரத்துறையில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மருத்துவ துறை சேவை

நமது நாட்டில் வரும் காலத்தில் மருத்துவ துறையின் சேவையின் தேவை மேலும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் நவீன விஷயங்களை படித்து உங்களின் அறிவாற்றல் மற்றும் திறனை தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே இருந்தால், நீங்கள் உங்கள் துறையில் தலைமை பதவிக்கு வர முடியும். உலக மருத்துவ துறைக்கு நீங்கள் அறிவாற்றலை உருவாக்குபவர்களாக வருவீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்த விழாவில் 28 ஆயிரம் இளநிலை மாணவர்கள், 6 ஆயிரம் முதுநிலை மாணவர்கள், பல்நோக்கு மருத்துவ படிப்பை முடித்த 200 பேர், பி.எச்.டி. முடித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை ராம்நாத் கோவிந்த் முடித்துக் கொண்டு தனி விமானத்தில் ஆந்திராவுக்கு சென்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்